Pongu Tamizh Pongu Tamizh  

தங்களுடைய ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள்!

தங்களுடைய ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள்!
நேர்காணல் - விதுல் சிவராஜா

 

பச்சிலைப்பள்ளி என்று அழைக்கப்படும் பளை, வரலாற்றுக்கு முற்பட்ட பூர்வீகப் பிரதேசம். பனையும் தென்னையும் சிறு காடுகளும் மணல்வெளிகளும் உவர்த்தரவையுமான இந்தப் பிரதேசம், போருக்கு முந்தி யாழ்ப்பாணத்தின் அழகிய முகம். தென்னஞ்சோலைகளும் பனந்தோப்புகளும் வியப்பூட்டும். அப்பால், ஆனையிறவுப் பரவைக்கடல். அங்கே இருந்தது உப்பளம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் நுழைவாயிலில் இருக்கும் பளையை அறியாதார் குறைவு. 

பளைக்கு வடக்கே வடமராட்சி கிழக்கு. மேற்கில் மிருசுவில், கொடிகாமம். தெற்கே பூனகரி – ஆனையிறவு - கிளாலிக்கடல். கிழக்கே இயக்கச்சியைக் கடந்தால், வண்ணாங்குளம், சுண்டிக்குளம். அதற்கப்பால் பெருங்கடல். 

இந்தப் பூர்வீகப் பிரதேசத்தில் இயக்கர்கள் வாழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். தொடர்ச்சியாக எப்பொழுதும் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், இன்று இந்தப் பகுதி ஒரு மாபெரும் சுடுகாட்டின் கொதிநிலமாகியுள்ளது. இலங்கையிலேயே ஆகக்கூடிய கண்ணிவெடிகள் உள்ள பிரதேசமாக பளையைத்தான் சொல்லமுடியும். 

ஈழப்போரில் ஆனையிறவுப் படைத்தளமும் முகமாலை முன்னரண்களும் முக்கியமானவை. இதனால், இந்தப்பகுதிகளில் 1980 களில் இருந்தே பளைப்பிரதேசம் சேதங்களையும் அழிவுகளையும் காணத் தொடங்கியது. 

குறிப்பாக ஆனையிறவுக்கு அருகில் இருந்த இயக்கச்சி பெரும்பாதிப்பை நீண்டகாலமாகச் சந்தித்தது. பிறகு முகமாலைப் பகுதியும் அழிவுப் பிரதேசமாகியது. விடுதலைப் புலிகளின் குடாரப்புத் தரையிறக்கத்தை அடுத்து, இத்தாவிலில் நடந்த சண்டையைக் குறிப்பிடலாம். இப்படியே பளைப் பிரதேசம் முழுதான ஒரு யுத்தகளமே.

அப்படி நடந்த இந்தப் பிரதேசத்தில் சில பகுதிகளில் இப்பொழுது மக்கள் குடியேறி வருகிறார்கள். 

இந்த நிலையில், இந்தப் பிரதேசத்தின் பிரதேச செயலர் திரு. முகுந்தனைச் சந்தித்தபோது சமகால நிலவரம் பற்றி அவர் சொன்னார்...

பளைப்பகுதியின் இப்போதையை நிலமை எப்பிடியிருக்கு?

பிரதேசத்தின் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கு. இனி, இதை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேணும். அதுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கு. 

பளை என்றால், பனையும் தென்னையும் நிறைஞ்ச ஊர்களின்ர நினைப்புத்தான் வரும். எத்தனை தென்னந் தோட்டங்கள் இருந்திருக்கு? ஆனால், இப்ப தென்னைகள் என்றால், மிகக் குறைவே. உருப்படியாக ஒரு தோட்டமும் இல்லை. மற்றது பனைகள். பனைகளும் பெருமளவுக்கும் அழிந்து விட்டன. 

சனங்கள் இப்பதான் சில கிராமங்களில குடியேறத் தொடங்கியிருக்கினம். இனித்தான் எல்லாத்தையும் கட்டியெழுப்ப வேணும். பதினெட்டுக் கிராமசேவகர் பிரிவுகளில எட்டிலதான் இப்ப சனங்கள் இருக்கக்கூடியதாக இருக்கு. இன்னும் இரண்டு மூண்டு பிரிவுகளில விரைவில ஆட்களை இருத்தலாம் எண்டு நினைக்கிறன்.

கிளாலி, இத்தாவில், வேம்போடுகேணி, முகமாலை, இந்திரபுரம், செல்வபுரம் போன்ற இடங்களில இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படேல்லை. ஆகையால், இந்தப் பகுதிகளில் சனங்கள் குடியேறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும். 

இப்ப மீளக்குடியேறியிருக்கிற எட்டுக் கிராமங்களிலயும் எவ்வளவு பேர் இருக்கினம்?

புலோப்பளை, முல்லையடி, பளை நகரப்பகுதி, புலோப்பளை மேற்கு, மாசார், சோறன்பற்று, தர்மக்கேணி, தம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலதான் இப்ப ஆட்கள் இருக்கினம். இதில, 1564 குடும்பங்கள் இருக்கு. ஆட்களின்ர தொகை 5032. இந்தப் பிரிவுகளில மட்டும் இன்னும் 663 குடும்பங்கள் மீளக்குடியமர வரவேணும். 

இதைவிட, குடியேற்றம் நடக்க வேண்டிய மற்றப் பத்துப் பிரிவுகளும்தான் சனத்தொகை கூடிய பகுதிகள். பளைப் பிரதேசம் தொடர்ச்சியாக யுத்தம் நடந்த இடமெண்டபடியால கனபேர் நீண்டகாலமாக வேறிடங்களில இருக்கினம். அவர்கள் எல்லாம் வந்தால், எங்களின்ர இப்போதையப் பதிவுகளை விடவும் கூடுதலான எண்ணிக்கை வரும். 

மீள் குடியேறியுள்ளவர்களுடைய இப்போதைய வாழ்க்கை நிலைவரம் எப்பிடியிருக்கு?

எல்லா அகதிகளையும் போல, எல்லா மீள்குடியேற்ற மக்களையும் போல, இவையளுக்கும் ஏராளம் பிரச்சினைகள் இருக்கு. ஆனால், இந்தப் பகுதி ஒரு நிரந்தமான, பூர்வீக இடம் எண்டபடியால், குடிநீர்பிரச்சினை, போக்குவரத்துப் பிரச்சினை போன்ற நெருக்கடிகள் எல்லாம் இல்லை. இல்லை எண்டு சொல்லுறதைவிடக் குறைவெண்டு சொல்லலாம். 

மற்றும்படி, தொழில், வருமானம், இருப்பிடம் எல்லாமே பிரச்சினைதான். இங்க இருந்த பாடசாலைகளில பலதும் சேதமாகியிருக்கு. முகமாலைப் பகுதியில பெரிய சண்டை நடந்திருக்கு. அதால, பளை மத்திய கல்லூரி முற்றாகவே அழிஞ்சு போய்க்கிடக்கு. 

கிளாலி, முகமாலை, வேம்போடுகேணி ஆகிய இடங்களில இருந்த பாடசாலைகள் இருந்த இடமே தெரியவில்லை. பொதுக்கட்டிடங்கள், வீடுகள், கோவில்கள் எல்லாம்தான் அழிந்திருக்கின்றன.

பொதுவாகவே பிரதேசத்தின் பௌதீகக் கட்டுமாணங்களும் இயற்கை வளங்களும் மக்களின் சமூகக் கட்டுமாணங்களும் அழிந்துவிட்டன. இனி எல்லாத்தையும் கட்டியெழுப்பவேணும். இதொரு பெரிய வேலை. 

நீண்டகாலமாக படிப்படியாகக் கட்டியெழுப்பிய எல்லாத்தையும் அதை மாதிரி உடனடியாக கட்டியெழுப்பேலாது. அதிலும் இயற்கை வளங்களை மீண்டும் நினைக்கிறமாதிரி உருவாக்கி விடமுடியாது. எல்லாத்தையும் படிப்படியாகத்தான் செய்ய முடியும். ஆனால், சனங்களுக்கு எல்லாமே உடனடியாகத் தேவை. அவையளைப் பொறுத்தவரையில் அது சரிதான். 

உங்களுடைய பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்? அவையளின்ர நிலமை எப்பிடியிருக்கு?

இந்தப் பாதிப்புகள் பலவகை. சிலர் பெற்றோரை இழந்திருக்கினம். சிலர் கணவரை இழந்திருக்கினம். சிலருக்கு பிள்ளைகளின் இழப்பேற்பட்டிருக்கு. சில பிள்ளைகளுக்கு அப்பா இல்லை. சிலருக்கு அம்மா இல்லை. வேறு சிலபேர் உடல் உறுப்புகளை இழந்திருக்கினம். பளை முல்லையடி என்ன இடத்தில ஒரு பெண் பிள்ளைக்கு இரண்டு கைகளும் இல்லை. இந்த மாதிரிப் பாதிப்புகள் ஒருவகை. 

இன்னொரு வகையான பாதிப்பும் இருக்கு. அது சொத்திழப்பு. வருமான இழப்பு. வீடிழப்பு. அப்பிடியே கல்விக்கான வசதிகளை இழந்திருக்கிறது. மருத்துவ வசதிகள், மின்சாரம் இப்பிடி பல வகையான இழப்புகள் உண்டு. 

ஆனால், நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு அரசாங்கத்தின் மூலமாகவும் பொது அமைப்புகளின் மூலமாகவும் தொண்டர் அமைப்புகளின் மூலமாகவும் எல்லாத்தையும் சீர்ப்படுத்த முயற்சிக்கிறம். 

ஆனால், முதல்ல நான் சொன்ன மாதிரி இதுக்கெல்லாம் நீண்ட காலம் எடுக்கும். இப்ப ப.நோ.கூட்டுறவுச் சங்கத்துக்கு நானே தலைவர். அப்பிடித்தான் கிளிநொச்சி மாவட்டம் முழுவதிலும் இருக்கிற சங்கங்களுக்கு பிரதேச செயலர்களும் கச்சேரியில் இருக்கிற நிர்வாக அதிகாரிகளும்தான் தலைவர்களாக செயற்படுகிறம். 

சமூகக் கட்டுமானம் சரியா வரும்போது, மக்களில் பெரும்பாலானவர்கள் மீளக்குடியேறிய பிறகு, இதுக்கெல்லாம் தேர்தல்கள் நடக்கும். அதுவரை இப்பிடித்தான் ஒரு மாற்று ஏற்பாடு. இது மாதிரித்தான் எல்லாத்தையும் தற்காலிக ஏற்பாடுகளின் முலமாகச் சீர்ப்படுத்த வேண்டியிருக்கு.

சனங்களின்ர நேரடிப் பாதிப்பைப் பற்றிச் சொல்லும்போது, தகப்பனை இழந்த பிள்ளைகள், மீள் குடியேறிய இந்த எட்டுப் பிரிவிலயும் 206 பேர். தாயை இழந்தவையள் 47. தாய், தகப்பன் இருவரையும் இழந்தவையள் 21. கணவனை இழந்திருக்கிற பெண்கள் 260. பொதுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிற பெண்கள் 252. போரில காணாமற் போனவர்களைப் பற்றி எங்களிட்ட இதுவரை பதிஞ்சிருக்கிற தொகை இரண்டு.

எந்த மாதிரியான உதவிகளை இந்த மக்களுக்கு நீங்கள் செய்கிறீங்கள்? 

அது பலவகையில அடங்கும். தனிப்பட்ட உதவிகள். சமூகத்துக்கான – ஊர், பிரதேசத்துக்கான உதவிகள் என்று இதைப் பார்க்கலாம். தனிப்பட்ட ரீதியில் எல்லோருக்கும் உலர் உணவு விநியோகம் நடக்குது. ஆரம்பத்தில் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது. பிறகு 20,000 ரூபாய் வழங்கப்பட்டது. மிகச் சில குடும்பங்களுக்கு இந்தப் பணம் கொடுக்கப்படவேண்டியிருக்கு. அதற்கான நடவடிக்கைகள் நடக்குது. 

விவசாய உபகாரணங்கள் வழங்கப்பட்டிருக்கு. அடுத்த கட்டமாக விவசாயத் திணைக்களத்தினூடாக பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான உதவிகள் கிடைக்கவுள்ளது. 

இழப்புகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். வீடமைப்புக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஆனால், கிளிநொச்சியில் வேலை செய்கிற சில தொண்டர் அமைப்புகள் பளைப் பகுதிக்கு வரத் தயங்குகின்றன. அவர்கள் சொல்லுகிற காரணம், தங்களுடைய இப்போதைய செயற்பாட்டு மையம் வவுனியாவில் இருப்பதால், அங்கேயிருந்து பளைக்கு வந்து செல்லும் தொலைவு அதிகமாக இருக்கிறது என்று. 

இதைப் பரிசீலிக்கும்படி கேட்டிருக்கிறம். காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படலாம். மற்றப்படி ’நேர்ப்’ என்ற அமைப்பு 146 வீடுகளைக் கட்டுவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கு. மாசார், தர்மக்கேணி, சோறன்பற்று ஆகிய பிரதேசங்களில் வேலைகள் நடக்கின்றன. 

பளைப் பிரதேசத்தில் ஏறக்குறைய 3200 வீடுகள் தேவை. கிணறுகள், மலசல கூடங்கள், வீதிகள் போன்றவற்றைச் சீர்ப்படுத்தி வருகிறோம். பாடசாலைகளை இயக்கியிருக்கிறம். புதிதாக 345 கிணறுகளும் 971 மலசல கூடங்களும் மீள் குடியேறிய பகுதிகளுக்குத் தேவைப்படுகின்றன. 464 கிணறுகளை இந்த மீள்குடியேற்றஞ் செய்யப்பட்ட பகுதிகளில் திருத்தி சீரமைக்கவேணும். 

ஆனால், பாடசாலைகளை முழுமைப்படுத்துவதற்கு காலம் எடுக்கும். அதற்குப் பெருமளவு நிதி தேவை. பிள்களைகள் பற்றாக்குறைகளுடன்தான் படிக்கிறார்கள். இப்போது ஆறு பாடசாலைகள் இயங்குகின்றன. 

முன்பள்ளிகளும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. முன்பள்ளிகளுக்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன.  ஏ9 வீதி பளைப் பிரதேசத்தை ஊடறுத்துச் செல்வதால் இந்தப் பிரதேசம் தொடர்பாடலுக்கு வசதியாக இருக்கு. பூநகரி எல்லாம் இப்படியல்ல. 

இந்த மக்களின் தொழில் வாய்ப்பு, வருமானம் போன்றவை எப்படி இருக்கின்றன? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?

மக்களுக்கு முந்தியைப் போல தொழில் வாய்ப்புகள் இல்லைத்தான். ஆனால், ஏ9 பாதைக்கு அருகே இருப்பதால், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி என்று எங்கேயும் விரைவாகப் போய்வரலாம். இது சில தொழில்வாய்ப்புகளை பிற இடங்களில் தேடுவதற்கு உதவுகிறது. 

வீடமைப்புத்திட்டம் வந்திருக்கிறது. அதில் கொஞ்சப்பேர் வேலை செய்கிறார்கள். பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் இயங்க ஆரம்பிக்கிறது. ஆனால், கூலித்தொழிலாளர்கள், வாகனங்களை வைத்திருந்தவர்கள், விவசாயிகள் எல்லோருக்கும் நெருக்கடிகள் உண்டுதான். 

முக்கியமாக பனை, தென்னை வளங்கள் அழிந்திருக்கிறது பெரும்பாதிப்பே. அந்த வருமானத்தை பளைப்பிரதேசம் இழந்திருக்கு. தென்னை, பளைக்கு ஒரு சிறப்படையாளம். பளையில் ஒரு தென்னை ஆராய்ச்சி நிலையமே இருந்தது. தென்னைப் பயிர்ச்செய்கைக்கான ஊக்குவிப்பு மையமாகவும் இது இருந்தது.

ஆனையிறவு உப்பளம் செயலிழந்ததால், மாசார், இயக்கச்சிப் பகுதி மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கு. உப்பளம் இயங்கினால் இந்த வேலைவாய்ப்புகள் மீளக் கிடைக்கும். 

பொதுவாக பளையின் மீள் குடியேற்றம் பூர்த்தியாவதற்கு எவ்வளவு காலம் செல்லும்?

பளைப்பிரதேசம் போரின்பொழுது முக்கிய இடங்களாக இருந்தது. இயக்கச்சி, ஆனையிறவுக்கு அண்மித்த பிரதேசங்கள், கோவில்வயல், முகமாலை, கிளாலி, இத்தாவில், வேம்போடுகேணி போன்ற பிரதேசங்கள். இங்கே கண்ணிவெடிகளை அகற்றுவது பெரிய பணி. செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், காலம் எடுக்கலாம். 

அண்மையில் கிளாலிப்பகுதிக்கு மக்களை அழைத்துச் சென்றிருந்தோம். அங்கே ஒரு கோவில் பொங்கலும் நடைபெற்றது. மக்கள் தங்களுடைய ஊருக்கு வந்ததையிட்டு மகிழ்ந்தார்கள். சிலர் தங்கள் ஊரைப் பார்த்துக் கண்கலங்கி அழுதார்கள். 

ஊர் என்பது மனிதர்களின் உணர்வோடு சம்மந்தப்பட்ட ஒரு விசயம். அவர்களை மீண்டும் விரைவில் குடியமர்த்தக்கூடிய சூழல் ஒன்று வரும் என்று அங்கே சொன்னார்கள். லட்சக்கணக்கான மிதிவெடிகள் அந்தப்பகுதிகளில் இருப்பதாக படை அதிகாரி சொன்னார். தங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக அவற்றை அகற்றித்தருவதாக அவர் கூறினார். 

மக்கள் முழுமையான வாழ்க்கைக்கு – முழமையான இயல்பு நிலைக்கு எப்போது திரும்புவார்கள்?

சனங்கள் இப்போதே இயல்பு நிலையை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனால், அந்த முன்னேற்றத்துக்காக அவர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கு. 

ஏனென்றால், அவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் இருந்துதான் தங்களுடைய ஒவ்வொரு வேலையையும் செய்ய வேண்டியிருக்கு.

ஒவ்வொரு கிழமையும் அவர்களுடைய வாழ்க்கையில், ஒவ்வொரு பிரதேசத்திலும் முன்னேற்றத்தை அவதானிக்க முடியும். ஆனால், தென்னையையும் பனையையும் அப்படி நினைத்த உடனே வளர்த்து விட முடியாது.

ஒரு சீரான நிலைமை வாறதுக்கு இன்னும் ஒரு சில ஆண்டுகள் செல்லும். இதுக்கு எல்லாற்றை உதவியும் தேவை. ஒத்துழைப்புகளும் அவசியம். 

இப்படி போருக்குப் பின்னர் மக்களுடைய மீள் வாழ்வுக்கான பணிகள் மற்றும் நெருக்கடிகால பணிகளைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

சனங்களுக்கு உதவுகிறது மகிழ்ச்சியான விசயமே. சில பாதிப்புகள் மனதைக் கஸ்ரப்படுத்தும். ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய சொந்த வீடுகளுக்கு வரும்போது இருக்கிற மகிழ்ச்சியைப் பார்க்கவேணும். அது ஒரு உணர்வுபூர்வமான விசயம். 

அங்கே வந்து வீடில்லாமல் அவர்கள் கஸ்ரப்படுகிறது இன்னொரு வகையான உணர்வைத்தரும் சங்கதி. 

எப்படியோ பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் மீள் வாழ்வுக்கு உதவுவதில் திருப்தியுண்டு.  

7/23/2010 6:15:24 PM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

 
புதினங்கள்
செய்திகள்